மலையாள மொழி பேசும் மக்களின் பண்டிகைகளில் மிக முக்கியமான ஒன்றாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. இந்தப் பண்டிகை, ஆண்டுதோறும் ஆவணி மாத அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாள்கள் நடைபெறும். இது மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வீடுகளிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக பல வண்ண மலர்களால் ஆன கோலங்களை பெண்கள் வரைந்து வழிபட்டு, கொண்டாடுவர்.
இந்நிலையில், திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் வசிக்கும் கேரள மக்கள் ஒணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.
அந்த வகையில், சேலம் கோரிமேடு பகுதியில் வசித்து வரும் கேரள மக்கள் ஓணம் திருநாளை அத்தப்பூ கோலமிட்டு பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.
முகக்கவசம் அணிந்து மகிழ்ச்சி பொங்க உற்சாகமாக ஓணம் பண்டிகையை கொண்டாடினர். இதேபோன்று சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கேரள மக்கள் தங்கள் வீடுகளிலேயே ஓணம் பண்டிகையை கொண்டாடி சிறப்பித்தனர்.
இதுகுறித்து கேரள மக்கள் கூறுகையில், இந்த ஓணம் பண்டிகை , உறவினர்களை அழைக்காமல் கொண்டாடுவது மிகவும் வருத்தமளிக்கிறது. உறவினர்கள் இல்லாமல் கொண்டாடும் இந்த ஓணம் பண்டிகை, பண்டிகையாகவே தெரியவில்லை. கரோனா இல்லாத நிலை உருவாகி நாட்டு மக்கள் நலம் பெற வேண்டுகிறோம்" என்றனர்.
இதையும் படிங்க: வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 269 இந்தியர்கள் மீட்பு!