சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருக்கல்வாடி ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், அதிமுகவின் ஊராட்சி செயலாளருமான பழனிசாமி, மனைவி இரண்டு மகன்களுடன் வசித்துவருகிறார்.
நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டார். அப்போது தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான பணத்தை தேர்தல் செலவுக்கு பழனிசாமி உபயோகம் செய்கிறார் என சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நடந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றிபெற்ற சரவணனுக்கும், பழனிசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் சமாதானமாக சென்றனர். இந்நிலையில், இன்று சரவணன் அவருடைய தரப்பினர் பழனிசாமியின் வீட்டிற்கு வந்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர்.
இதில் பழனிசாமி உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் 7 பேர் காமடைந்துள்ளனர். இதுகுறித்து பழனிசாமி கூறும்போது, 'சரவணன் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல், தேர்தல் முன் விரோதம் காரணமாக கண்ணில் மிளகாய்த்தூள் தூவி என்னையும் என் குடும்பத்தையும் தாக்கினார்கள். என் வீட்டு ஜன்னல் கண்ணாடி, கிரைண்டர், வீட்டு உபயோக சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை சேதபடுத்தியுள்ளனர்,” என்று தெரிவித்தார்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த ஓமலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் விசாரணை செய்துவருகிறார்.
இதையும் படிங்க: மாவட்ட சேர்மனுக்கு பேசுவதற்கு வகுப்பெடுத்த தொண்டர்கள் - வைரல் வீடியோ