கரோனோ வைரஸ் தொற்று பொதுமக்களிடம் பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு காலத்தில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வலர்கள் மற்றும் அரசு சார்பில் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று கன்னங்குறிச்சி பேரூராட்சியில் பணிபுரியும் 200 தூய்மைப் பணியாளர்களை ஊக்கப்படுத்த கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அரிசி உள்ளிட்ட 20 வகையான உணவுப் பொருள்களை வழங்கினர். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கும் பேரூராட்சி அலுவலர்களுக்கும் முகக்கவசங்களையும் வழங்கினர்.
இதுகுறித்து முன்னாள் மாணவர் சந்திரசேகர் கூறுகையில், “தூய்மைப் பணியாளர்கள் தான் தற்போது வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் இருக்க ஊர் முழுவதும் தூய்மைப் பணிகளை இடைவிடாமல் செய்து விடுகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை வழங்குவது மிகவும் முக்கியம்.
அதன்படி கடந்த 2005ஆம் ஆண்டு கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களாகிய நாங்கள் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப் பொருள்களையும், முகக்கவசங்களையும் வழங்கியிருக்கிறோம்.
மேலும், கன்னங்குறிச்சி தெருக்கள் முழுக்க கிருமி நாசினி மருந்துகளை நாங்களே தெளித்து வருகிறோம். தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுவரும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முழு அடைப்பின்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?