சேலத்தை அடுத்த சித்தேஸ்வரர் கோயில் மலைப்பகுதியில் எடப்பாடி நல்லகவுண்டர்(64) - அருக்காணி(60) என்ற வயதான தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக வயலுக்கு அடிக்கக் கூடிய பூச்சி மருந்தை சாப்பிட்டுவிட்டு உயிரிழந்துள்ளனர்.
மலைப்பகுதியில் வயதான தம்பதியினர் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதியினர், அருகிலுள்ள இரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழப்பு தொடர்பாக இரும்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், வயதான தம்பதியினர் தனது மருமகளான சரஸ்வதி மற்றும் இரு பேரப்பிள்ளைகளுடன் கவுண்டன்பட்டியில் வசித்து வந்ததும்; அருக்காணிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.
முதுமையின் காரணமாக நடக்க முடியாமல் போனதால் மனவேதனை அடைந்த இருவரும் பூச்சி மருந்து சாப்பிட்டு உயிரிழந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்குச் சென்றாலும் ஒன்றாக செல்லும் இந்த வயதான தம்பதியினர், இறப்பிலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று சேர்ந்தே உயிர்விட்டுள்ளதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதினரைக் கண்கலங்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: பேருந்தில் பூத்த காதல் - ஃப்ளாஷ்பேக்கை பகிர்ந்துகொண்ட ரஜினி!