சேலம் மாநகராட்சி பகுதியில் கரோனா வைரஸ் தொற்றை குறைக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் முகக்கவசமின்றி வெளியே வந்தால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது. பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றால் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஸ்பெக்ட்ரம் அகாதமியில் மாணவ மாணவிகளை சேர்த்து, நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வருவதாக சேலம் சப்- கலெக்டர் சரவணனுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து இன்று (ஏப்.28) சரவணன், மாநகராட்சி நகர் நல அலுவலர் பார்த்திபன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மாணவிகள் சிலர் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.
மேலும் மாணவிகள் யாரும் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளி பின்பற்றாமலும் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து மாணவிகளை உடனே அவரவர் வீடுகளுக்கு செல்லுமாறு அலுவலர்கள் அறிவுறுத்தினர்.
பின்னர் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் வசூலித்து ஸ்பெக்ட்ரம் அகாதமி இழுத்து மூடி மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் சேலத்தில் சில நீட் தேர்வு மையங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த நீட் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த நீட் தேர்வு மையங்களும் சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.