திமுக உடனான கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் இரண்டு நாள்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தவந்த வேல்முருகன், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்துவதற்கு பணம் இல்லை.
12,500 கோடி ரூபாய் தள்ளுபடி என்று கூறிவிட்டு நிதிநிலை அறிக்கையில் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த 5 ஆயிரம் கோடி என்பது அதிமுக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வாங்கிய பயிர்க்கடன், நகைக்கடன் ஆகியவற்றை அடைக்க மட்டுமே சரியாக இருக்கும்.
இதனால் ஏழை, எளிய பாமர விவசாய மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே.
5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ள தமிழ்நாடு அரசு எப்படி இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்? பாஜக அரசும், அதிமுக அரசும் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்.
ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது ஒரு அரசாணை வெளியிட்டிருந்தார். அந்த அரசாணையில் இந்தியாவைச் சேர்ந்த யார் வேண்டுமென்றாலும் தமிழ்நாடு அரசு பதவிகளில் அமரலாம் என்பதே அந்த அரசாணை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அரசாணை ரத்து செய்யப்படும்" என்றார்.