கரோனோ வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும், கட்டாயம் பொதுவெளியில் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் பொதுவெளியில் நடமாடும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணியாமல் சேலத்தில் நடமாடும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து மாநகராட்சி சார்பில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இன்று, சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலித்து வந்தனர்.
அப்போது அவ்வழியே தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் முகக்கவசம் அணியாமல் பேருந்தை இயக்கி வந்தனர். இதனைக் கண்ட மாநகராட்சி அலுவலர்கள் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர், நடத்துநருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல முகக்கவசம் அணியாமல் பேருந்தை இயக்கிய 5 க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.