மக்களின் அன்றாட வாழ்க்கையில் பேருந்தில் பயணிப்பது இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. உறவினரின் திருவிழா, வீட்டு விஷேசங்கள், தினசரி வேலைக்குச் செல்லும் மக்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் என பேருந்துகளில் மட்டும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இரவு பகல் என்று எல்லா நேரத்திலும், மாநில தலைநகர் சென்னைக்கும், அண்டை மாநிலங்களின் தலைநகர்களுக்கும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே, மக்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் பேருந்துகளில், விபத்துக் காலங்களில் பயன்படுத்த முதலுதவிப் பெட்டிகள் இல்லை என்று பயணிகளும் தொழிற்சங்க அமைப்பினரும் புகார் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் திடீர் உடல்நலக் குறைவின்போது முதலுதவி செய்ய இயலாத சூழல் உருவாகிறது என்று பயணிகள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய சமூக ஆர்வலர் தேவிகா, 'தனியார் பேருந்து ஒன்றில் சேலத்தில் இருந்து சென்னை சென்ற லயன் மணி என்பவர் முதலுதவிப் பெட்டி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் . இதுபோன்று பயணிகள் தினமும் ஆபத்தை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது . இதில் அரசு விரிவான ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுத்து பயணிகளின் உயிரை பாதுகாக்க வேண்டும்' என்றார்.