கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி மாதம் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தவுபிக், அப்துல் சமீம் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட தவுஃபிக், அப்துல் சமீம் ஆகிய இருவரும் பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட ஊர்களில் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இவர்கள் யார் யாரிடம் பேசினார்கள் என தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று காலை கொச்சியில் இருந்து மூன்று பிரிவுகளாக பிரிந்து சேலம் வந்த என்ஐஏ அதிகாரிகள், அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் சிலரிடமும், ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி பகுதிக்குச் சென்று விசாரணை செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், முகமது புறா பகுதியில் அப்துல் ரகுமான் என்பவரின் வீட்டில் அதிகாலை 5 மணி முதல் மூன்று என்ஐஏ அதிகரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஸ் தீவிரவாதிகளுக்கு உதவியர்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்ததாகக் கூறி அப்துல் ரகுமான் இரண்டு மாதத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணையை பாதுகாப்பு முகமை அதிகாரிகள் செய்து வருவதால் சேலத்தில் பரபரப்பு நிலவிவருகிறது.
இதையும் படிங்க: ராமநாதபுரத்திலுள்ள நகைக்கடையில் என்ஐஏ அலுவலர்கள் திடீர் சோதனை!