சேலம் அடுத்த ஆவணி பேரூர் கீழ் முகம் ஊராட்சியில் சரபங்கா நதியின் குறுக்கே 1.90 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம், புதிய சார் நிலை கருவூல அலுவலக கட்டடம், மாணவர் நல விடுதி என 5.87 கோடியில் முடிவுற்ற 17 திட்டப்பணிகளை நேற்று (சனிக்கிழமை) முதலமைச்சர் திறந்துவைத்தார்.
அப்போது பேசிய அவர், "எடப்பாடி நகராட்சிக்கு அருகில் பிரமாண்டமான சந்தை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி தொகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படவுள்ளது.
எடப்பாடி தொகுதியில் மக்கள் வைத்த கோரிக்கைகளைக் கிட்டத்தட்ட 85 விழுக்காட்டிற்கும் மேல் நிறைவேற்றித் தந்திருக்கிறோம். எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக அந்தப்பகுதி மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்செங்கோட்டிலிருந்து ஓமலூர் வரை உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காகத் திட்டம் தீட்டப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், வெற்றிவேல், ராஜா, சித்ரா, மனோன்மணி, அரசுத் துறை அலுவலர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.