தமிழ்நாடு அரசின் சார்பில் 109 கோடி மதிப்பீட்டில் எட்டு போக்குவரத்துக் கழகங்களுக்கு 370 புதிய பேருந்துகள் அண்மையில் வழங்கப்பட்டன. இந்த பேருந்துகளின் சேவையை செப்டம்பர் 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இவற்றில் சேலம் மண்டலத்திற்கு 28 பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. இதில் மூன்று பேருந்துகளை அன்றைய தினமே முதலமைச்சர் இயக்கி வைத்தார்.
மீதமுள்ள 25 பேருந்துகளின் சேவையை தொடங்கும் நிகழ்ச்சி சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் ராமன் 25 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிதாக இயக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள் சேலத்திலிருந்து கோவை, ஈரோடு, பழனி, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, புதிதாக இயக்கப்பட்டுள்ள 25 பேருந்துகளை சேர்த்து சேலம் மண்டலத்தில் 373 புதிய பேருந்துகளும், சேலம் கோட்டத்தில் 682 புதிய பேருந்துகளும் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.