சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வராயன் மலைகளில் இருபதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் அமைந்துள்ள செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி பானுமதி கர்ப்பமாக இருந்து வந்த நிலையில், அண்மையில் பானுமதிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் சீனிவாசன் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த ஆம்புலன்ஸ் பானுமதியை ஏற்றிக்கொண்டு கருமந்துறை அரசு மருத்துவமனையை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த வேளையில், மலைப்பாதையில் லாரி ஒன்று பழுது ஏற்பட்டு நின்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆம்புலன்ஸ் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
.
இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஸ்டாலின், மருத்துவ உதவியாளர் அறிவுக்கரசு ஆகியோரும் பானுமதியுடன் வந்த இரண்டு உறவினர்ப் பெண்களும் பிரசவத்தை ஆம்புலன்ஸிலேயே பார்க்கும் சூழல் ஏற்பட்டது. அவர்களின் முயற்சியால் பானுமதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் நிலைமை சீரானவுடன் தாயும் சேயும் கருமந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.