இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிலிருந்த மாவட்டங்களைப் பிரித்துத் தனி மாவட்டமாக அறிவித்திருப்பதன் மூலம் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்து, அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பரப்பளவில் பெரியதாக இருக்கிற மாவட்டங்களை நிர்வாக வசதிக்காகத்தான் பிரிக்கப்படுகிறது என்று நம்புகிறேன்.
அதேநேரம், மாவட்டப்பிரிப்பு கோரிக்கையை நெடுநாளாகக் கொண்டிருக்கும் பெரிய மாவட்டமான சேலம் மாவட்டத்தை இன்னும் பிரிக்காதிருப்பது ஏனென்று புரியவில்லை. கோரிக்கை வராத மாவட்டங்களைப் பிரித்த தமிழ்நாடு முதலமைச்சர், தனது சொந்த மாவட்ட மக்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?
சேலம் மாவட்டத்தின் தற்போதைய மக்கள் தொகை 34.82 லட்சமாக உள்ளது. இதில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகராட்சியாகவும் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஆத்தூர் விளங்குகின்றது. ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அவசர தேவைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணிகளுக்குச் செல்வதற்கு 3 மணி நேரமாகிறது.
அதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ஆத்தூரைச் சுற்றியுள்ள கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி, பேரூராட்சிகள், 130 ஊராட்சிகளை இணைத்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். அண்மையில் சுதந்திர தின விழா அன்று கிராம சபை கூட்டத்தில் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனத் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.
ஆகவே இப்பொழுது பிரிக்கப்பட்டிருக்கிற மாவட்டங்களைவிடப் பரப்பளவில் பெரிய மாவட்டமாகச் சேலம் இருப்பதால், முதலமைச்சர் உடனடியாக அம்மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு