மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் நாள்தோறும் போராட்டங்கள் வலுத்தவாறே உள்ளன. சில தினங்களுக்கு முன்பு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதைக்கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், சேலம் கோட்டை மைதானம் அருகே 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழுக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றவேண்டும், வண்ணாரப்பேட்டையில் மக்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு இந்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் அனைவரும் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ எதிர்ப்பு தீர்மானம் - ஏற்க மறுத்த சபாநாயகரின் செயலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு!