சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதிநாதன் (64). இவர் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் அர்த்தநாரி பிள்ளையின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மக்கள் மீது அன்பு கொண்டு பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலில், கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு வரிகளில் பொன்மொழிகளை சுவர்களில் எழுதிவந்தார். சேலம் மாநகரில் வள்ளுவர் சிலை உள்ளிட்ட சுமார் 36 இடங்களில் உள்ள சுவர்களில் வாரம் தோறும் பொன்மொழிகளையும், நம்பிக்கை வாசகங்களையும் அழகுற தமிழில் எழுதி பொதுமக்களைக் கவர்ந்துவந்தார்.
சேலம் மக்களால் எம்.எம்.எம். கார்னர் பசுபதிநாதன் என அனைவராலும் அறியப்பட்டவர். இவரது சேவையைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று (ஏப். 15) காலை உடல்நலக்குறைவால் அவர் காலமானார். அவரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா இரண்டாவது அலை... குஜராத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு!