நமது அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் சிறிய பொருள் நாம் தேடும் போது கிடைக்க வில்லை என்றால் கூட, ஒரு நிமிடம் பதற்றம் நம்மை முழுவதும் தொற்றிக்கொள்ளும். ஆனால், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் - ராஜம்மாள் தம்பதியினர் தனது மகனைத் தொலைத்து விட்டு 12 ஆண்டுகளாகத் தேடி வந்துள்ளனர். அவர்களது இளையமகன் மனோகரனுக்கு மனநலம் பாதிப்பு பிரச்சனை இருந்துள்ள காரணத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு மருத்துவச் சிகிச்சைக்காகக் கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக மனோகரன் காணாமல் போனதைக் கண்டு, அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அவரின் பெற்றோர்கள் கோவை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் தீவிரமாகத் தேடியும் கிடைக்காததால், மிகுந்த துயரத்திற்கு ஆளாகினர். அவரைப் பற்றி சிறிய தகவல் ஏதும் கிடைத்திடாதா என்று தினந்தோறும் கனத்த மனதுடன் காத்திருந்துள்ளனர்.
இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பசியில்லா தமிழகம் அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கி தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் குமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் சாலையோரங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற நபர்களை மீட்டு, அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, திருச்செங்கோட்டுப் பகுதியில் இந்தக் குழுவினர் சென்றிருந்தபோது பேருந்து நிலையத்தில் உடலில் பலத்த காயங்களுடன் சுற்றித்திரிந்த நபரைப் பார்த்துள்ளனர். பின்னர் உடனடியாக அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சை அளித்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் அந்த நபரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுத் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் புகைப்படத்தைப் பார்த்த உறவினர்கள் அவரின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து உடனடியாக தன்னார்வ அமைப்பைத் தொடர்பு கொண்டு , சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகனை சந்திக்க நேரடியாகச் சென்றுள்ளனர்.
பின்னர் நபரின் அடையாளங்களைப் பார்த்த பெற்றோர்கள் 12 ஆண்டுகள் முன்பு தொலைந்து போன தனது மகன் மனோகரன் தான் என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, சேலம் மாநகர காவல் துறையினர் முன்னிலையில் மனோகரனை அவரின் பெற்றோர்களிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து பசியில்லா தமிழகம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில்," பசியில்லா தமிழகத்தை உருவாக்குவதற்காக நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். இதுவரை 60 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை மீட்டு உள்ளதாகவும், அவர்களில் 20க்கும் மேற்பட்டோரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து உள்ளோம். எங்கள் பயணத்தில் முதன்முறையாக 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை அவரது பெற்றோர்களிடத்தில் சேர்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதைத் தொடர்ந்து இந்தப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்வோம்" எனத் தெரிவித்தனர்.
மகனைப் பார்த்த பெற்றோர்கள் கூறுகையில்," கோவையில் காணாமல் போன மகனை 12 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டு, மீட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் மகனை மீட்டுக் கொடுத்த இளைஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் நன்றி" எனத் தெரிவித்தனர்.
இதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஆதரவற்ற மக்கள், காணாமல் போன நபர்கள் யாரையும் கண்டால், உடனடியாக உரியவர்களிடம் அல்லது காவல்துறையினருக்குத் தகவல் அளிப்பதன் மூலம், அவர்களைத் தொலைத்த உறவுகள் மகிழ்ச்சியடைவர் என்பது உறுதி.
இதையும் படிங்க : ரயிலில் தப்பிய திருடனை விமானத்தில் விரைந்துசென்று 'வரவேற்ற' காவல் துறையினர்!