சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசலில் ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா கடந்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்றது.
இந்த கால்நடை பூங்காவானது சுமார் 1100 ஏக்கர் பரப்பளவில் மூன்று பிரிவுகளாக கட்டப்படவுள்ளது. முதல் பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துகாட்டும் வகையிலான கறவை மாட்டு பண்ணை அமைக்கப்படுகிறது.
இரண்டாம் பிரிவில் பால், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை பாதுகாத்து பதப்படுத்துதல், அவற்றிலிருந்து உப பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் உருவாக்கப்படுகிறது.
மூன்றாவது பிரிவில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி, விவசாநிகளுக்கான பயிற்சி மையம், தொழில் மாணவர் பயிலரங்கம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட வளாகமும், இந்த வளாகத்தில் 82.17 கோடி மதிப்பில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைகிறது.
இதன்மூலம் கால்நடை மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 80 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.இதற்கிடையில் இதன் கட்டுமான பணிகள் இறுதி நிலையை எட்டி உள்ளது. இதையடுத்து, கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அவருடன், மாவட்ட ஆட்சியர் ராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவினை, வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்க உள்ளார். அதோடு ஐந்தாவது கால்நடை மருத்துவக் கல்லூரியும் திறக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து உடுமலைபேட்டை மற்றும் தேனி ஆகிய பகுதிகளிலும் புதிதாக கால்நடை மருத்துவக்கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட உள்ளது. அயல்நாட்டு ஆராய்ச்சியாளர்களும் சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவை திரும்பி பார்க்கும் வகையில் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் நடவடிக்கைளை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர் வேண்டுமென்றே குறை கூறி வருகின்றனர். விவசாயிகள், தங்களது கால்நடைகளுக்கு பிரச்னை என்றால் 1962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் உடனே மருத்துவர்கள் விரைந்து சிகிச்சை அளிப்பர்.
அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் உரிய வசதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி உள்ளது. கோழி இனங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள பல்லடத்தில் ரூ. 15 கோடி மதிப்பில் ஆராய்ச்சி மையம் முதலமைச்சர் உருவாக்கித் தந்துள்ளார். தீவனங்கள் பிரச்னை, கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டால் அதனை ஆராய்ச்சி செய்யும் வசதியும், சிகிச்சை அளிக்கும் வசதியும் இங்கு உள்ளது.
தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட அந்தந்த மாவட்டங்களில் கால்நடை தீவனங்கள் தயாரிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடை பூங்காவில் கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள், பால் சுத்திகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் ஆகியன அமைய உள்ளது" என்றார்.