சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசுக் கிளை அச்சகத்தில் தமிழ்நாடு செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசு அச்சகங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு ஆவணங்களை அரசு அச்சகத்தில் அச்சிடும் வசதிகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது எனவும் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த விபத்து என்றும், இந்த விவகாரத்தில் அரசு பொறுப்பேற்க முடியாது, ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், திரையரங்குகளில் பேனர் வைப்பது கண்காணிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், திரையரங்கு வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.