சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பொற்கொல்லர் சங்கர், இவர் பிரதமர் மோடியின் பிறந்தநாளில் பரிசளிக்க வெள்ளியில் 'மினியேச்சர் மோடி' சிலை செய்து சாதனை படைத்துள்ளார்.
இவர் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக பிரதமர் மோடியை பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில், வெள்ளியில் அவரின் உருவச் சிலையை வடிவமைக்க கரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொண்டுள்ளார். இதற்காக தினசரி மாலை நேரத்தில் மூன்று மணி நேரம் ஒதுக்கி, வெள்ளியில் ஒன்னே முக்கால் அங்குலத்தில் மோடி உருவச் சிலையை வடித்துள்ளார்.
பிரதமர் மோடி கையில் துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்வது போன்ற உருவத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். 17 நாள்கள் தொடர் முயற்சியாக 51 மணி நேரம் செலவழித்து 48 கிராம் எடையுள்ள சுத்தமான வெள்ளியில் மோடியின் உருவ சிலையை உருவாக்கிய சங்கரை பலரும் பாராட்டிவருகின்றனர். இந்தச் சிலையை மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி பரிசாக வழங்க உள்ளார் சங்கர்.
இதுகுறித்து பொற்கொல்லர் சங்கர் கூறுகையில், "மோடியின் உருவச் சிலை வடிக்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக நினைத்து, கரோனா ஊரடங்கை சரியாக பயன்படுத்திக்கொண்டேன். தம்மைச் சுற்றி தூய்மையாக இருக்க வேண்டும் என்ற மோடியின் கொள்கையைப்போன்று நானும் குப்பைகளை கீழே போடாமல் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு குப்பைத் தொட்டியில் போடுவதை வழக்கமாக மாற்றிக்கொண்டேன். எனது குடும்பமும் இதை பின்பற்றுகிறது. மோடியின் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாக அவரின் உருவச்சிலையை வடித்துள்ளேன். இதனை அவரின் பிறந்த நாளன்று நினைவு பரிசாக வழங்க வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க... ஜார்ஜ் ஃப்ளாய்ட் போராட்டத்தை முன்னிட்டு காந்தி, மண்டேலா சிலைகள் மூடல்!