மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள பழைய அனல் மின் நிலையத்தில், நான்காவது யூனிட்டில் தலா 210 மெகாவாட் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் நாள்தோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதேபோல், புதிய அனல் மின் நிலையத்தில், 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் நெய்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு மின் உற்பத்தி நிலையங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு அண்மையில் ஊதியம், நிர்வாகத்தால் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய குறைப்பை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் இன்று (ஏப்.9) முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் போது, அனல்மின் நிர்வாகத்தை கண்டித்தும் தமிழ்நாடு அரசை கண்டித்தும் ஒப்பந்த ஊழியர்கள்,கண்டன கோஷங்கள் எழுப்பினர். அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்களின் இந்த உள்ளிருப்பு போராட்டம் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போராட்டம் குறித்த கூறிய ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய குறைப்பு ரத்து செய்யப்படும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர் .
இதையும் படிங்க: கேரள மருத்துவக் குப்பைகள் பொள்ளாச்சியில் புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து கமல் ட்வீட்