சேலம்: மேட்டூர் அருகேவுள்ள தொட்டில்பட்டியைச்சேர்ந்தவர், ரகு என்கிற ரகுநாதன் (22). பிரபல ரவுடியான இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ரகுநாதனும் அதே பகுதியைச்சேர்ந்த அவரின் கூட்டாளியான கட்டட வேலைசெய்யும் வெள்ளையன் என்கிற மாரிகவுண்டனும், ஒரே குழுவாக இருந்து பல்வேறு திருட்டு மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் ரகுநாதன் தொட்டில்பட்டியில் உள்ள வேறு ஒரு குழுவில் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், கடந்த சில மாதங்களாக வெள்ளையனுக்கும், ரகுநாதனுக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.24) இரவு வெள்ளையன் தனது கூட்டாளிகளுடன் ரகுநாதனின் வீட்டுக்குச்சென்று, தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில் ரகுநாதனை வெள்ளையன் தரப்பினர் கடுமையாக அடித்து உதைத்து தாக்கினர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கருமலைக்கூடல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கும்பலை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
அதன்பின்னர் ரகுநாதன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைக் கவனித்த, வெள்ளையன் தனது கூட்டாளிகளுடன்பின் தொடர்ந்து சென்று மருத்துவமனை வளாகத்தில் வைத்து ரகுநாதன் சிகிச்சைக்காக சேரக்கூடாது என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.
பின்னர் ரகுநாதனை வெள்ளையன் மற்றும் அவரின் கூட்டாளிகள் கத்தியால் குத்தி, கழுத்தை சரமாரியாக அறுத்துக்கொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ரகுநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக்கண்ட செவிலியர் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகியோரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். வெள்ளையன் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த திருட்டு வழக்கு ஒன்றில், சிறைக்குச்சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆண் நண்பருடன் பழகிய மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை