கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பிய நிலையில் அதிக அளவில் நீர்வரத்து இருப்பதால் அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது . மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82 அடியாக உயர்ந்து உள்ளது.
ஒகேனக்கல் பகுதியில் வினாடிக்கு 3 லட்சம் கன அடி நீர் வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.