சேலம் மாநகராட்சிக்குட்பட்ட திருமணிமுத்தாறு பகுதியில் 400க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். அந்த இடத்தை மாநகராட்சியிடமிருந்து டெண்டர் மூலம் வருட குத்தகைக்கு எடுத்தவர் சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
மாறாக, அவர் காய்கறி கடை வைப்பதற்கு வியாபாரிகளிடம் தற்போது ஒரு கடைக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை திருப்பி தராத முன்பணம் கொடுத்தால் மட்டுமே கடை வைக்க அனுமதி கொடுப்பேன் என்று கூறி அடாவடி செய்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், இதனை எதிர்த்து அவரிடம் கேள்வி கேட்டால் , ரவுடிகளை வைத்து மிரட்டுவதாகவும் , பெண் வியாபாரிகளை ஆபாசமாக பேசுவதாகவும் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட 50க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகள் மடிப்பிச்சை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.