சேலம் என்றாலே நம் அணைவருக்கும் நினைவுக்கு வருவது மாம்பழம். சேலத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மாம்பழன் சீசன் தொடங்கும். இந்த மாம்பழங்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில் தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது.
சேலம் மார்க்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
சேலத்தில் தற்போது கடுமையான வெளியிலாலும், அவ்வப்போது பெய்யும் மழையாலும் சேலத்தில் மாம்பழம் வரத்து குறைந்துள்ளது. இதனால் மாம்பழங்களின் விலை இருமடங்கு உயர்ந்து விற்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மாம்பழங்களை வாங்குவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பதால் இந்த ஆண்டு சேலத்து மாம்பழம் சீசன் டல் அடிப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு சீசன் நாள்களில் விற்கப்பட்ட விலையைவிட 50 விழுக்காடு கூடுதலாக விற்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் இடையே போதிய ஆர்வம் இல்லை. இதுகுறித்து சேலம் மாம்பழம் மொத்த வணிகர் சீனிவாசன் கூறுகையில்," இந்த ஆண்டு மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. அதிக வெயிலும் மழையும், மாம்பழங்களின் வரத்தை குறைத்துள்ளது.
சேலம் மாம்பழம் வரத்து குறைவு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர் மாவட்டங்களில் மார்ச் மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை தொடரும். தற்போது சீசன் உச்சத்தை தொட்டு விற்பனை அதிகரிக்க வேண்டிய நிலையில் மழையால் வரத்து சரிந்துள்ளது. அதேநேரத்தில் ஆன்லைன் மூலமும் வெளியூர் வியாபாரிகள் மூலமும் அதிக அளவில் சேலம் மாம்பழங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. வரத்து குறைவால் மாம்பழங்களின் விலை சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு 120 ரூபாய்க்கு விற்ற மாம்பழம் தற்போது கிலோ 200 ரூபாய்வரை விற்கப்படுகிறது. அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், பெங்களூரா, பங்கனப்பள்ளி, செந்தூரா மாம்பழங்கள் தற்போது விலை அதிகமாக விற்கப்படுகின்றன. சென்ற ஆண்டு பொது முடக்கத்தால் மாம்பழம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது வரத்து அதிகம் இருந்தது. தற்போது வரத்தும் குறைந்துள்ளது.
பொது முடக்கம் தற்போதும் தொடர்வதால், மாம்பழங்களை விளைவிக்கும் விவசாயிகள், விற்பனை செய்யும் வியாபாரிகளும் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளோம் " என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் மாம்பழங்களின் வரத்து அதிகமாக இருந்தும் அதை உரிய விலைக்கு விற்க முடியாமல் போனது.
இதனால் விவசாயிகளுக்கு வருவாய் குறைந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு சீசனில் போதிய வருவாய் பெறலாம் எனற எண்ணத்தில் இருந்த வியாபாரிகள், விவசாயிகளுக்கு மாம்பழங்களின் வரத்து குறைவு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சீசன் நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.