சேலம் அரிசிபாளையம் சையத் ஜாபர் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் மகேந்திரன். இவரின் வீடு அமைந்துள்ள பகுதியில் ஒருவர் மரணமடைந்துள்ளார். அப்போது நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது, உறவினர்கள் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது.
இதில் பட்டாசின் தீப்பொறி, மகேந்திரன் வீட்டின் மேற்பகுதியில் இருந்த துணியின் மீது விழுந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கிவுள்ளது. வீட்டின் மேற்புறம் முழுவதும் மரப்பலகை வேலைப்பாடுகளால் அமைக்கப்பட்டிருந்தால் தீ மளமளவென எரியத் தொடங்கியது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீவிபத்து சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளப்பட்டி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:தனியார் மதுபான கடை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது - இருவருக்கு வலைவீச்சு!