கடலூர் மாவட்டம் வளையமாதேவியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவர் தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்துவருகிறார். இவர் தனக்கு பெண் தேவை என்று தனியார் திருமண தகவல் மையம் மூலம் 2017ஆம் ஆண்டு பதிவு செய்தார். இதைப் பார்த்த சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகிலுள்ள மருளையம் பாளையத்தைச் சேர்ந்த மேகலா (30) என்ற பெண் பாலமுருகனை தொடர்பு கொண்டார்.
மேகலா தனியார் கார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். பாலமுருகனும், மேகலாவும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி நெருங்கிப் பழகிவந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் பாலமுருகன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் தனக்கும் மேகலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. பின்னர் மேகலா பலமுறை தன்னிடம் பணம் கேட்டதால் 23 லட்சம் ரூபாய் வரை வீட்டு செலவிற்காக கொடுத்ததாகவும், பிறகு மேகலா அந்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் தெரிவித்தார்.
இதுதவிர மேலும் பலரிடம் பழகி வருவதாகவும் இதனால் தான் அவரிடம் சேர்ந்திருக்காமல் தனியே வந்துவிட்டதாகவும் தனது பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு புகார் கொடுத்தார். இதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகேரை நேரில் சந்தித்த மேகலா, பாலமுருகன் தன்னிடம் நெருங்கிப் பழகிவந்தார் என்றும், பிறகு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கிராஃபிக்ஸ் செய்து ஆபாச படங்களாக மாற்றி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், எனவே பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
இதனையடுத்து மேகலாவின் புகார் குறித்து சேலம் மாவட்ட கிராமப்புற காவல் துணை கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் விசாரணை செய்யும்படி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதன் பேரில் சங்கரநாராயணன், கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுஜாதாவும் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
பாலமுருகன் மீது பெண் வன்கொடுமை, மானபங்கப்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையறிந்து தலைமறைவாகிய பாலமுருகனை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.