சேலம்: பிரதமர் மோடியின் 73-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி சார்பாக சேலத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.ராமலிங்கம், “அதிமுக - பாஜக கூட்டணியில் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கின்ற பொழுது யார் எத்தனை தொகுதியில் நிற்பது, யார் யார் எங்கே நிற்பது என்ற முடிவுகளை எல்லாம் எங்களின் தலைமை முடிவு செய்து வருகிறது.
எங்களுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, கூட்டணியைப் பொரறுத்தவரை தேசிய கூட்டணியில் அதிமுக பொதுச் செயலாளர் அமர்ந்து, அந்த கூட்டணியை புதுப்பித்து வந்துள்ளார். அதற்குப்பின் இன்னும் கூட்டணியின் கூட்டம் நடைபெறவில்லை. அப்படி ஒரு கூட்டம் நடைபெற்று, அதில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்தால் அதன் பின் பேசிக் கொள்ளலாம். யாரோ நான்கு பேர் பேசுவது கட்சியினுடைய முடிவாக இருக்காது.
இதையும் படிங்க: மதுரை வந்த வந்தே பாரத்.. அமைச்சர் பிடிஆர்-க்கு கேக் ஊட்டிவிட்ட ஆளுநர் தமிழிசை!
அவர்களுடைய கட்சியின் தலைமையும், எங்களுடைய கட்சியின் தலைமையும் பேசி முடிவு எடுக்க எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. எங்களுடைய ஒரே ஒரு லட்சியம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தை அதிகாரத்தில் இருந்து வீழ்த்துவது. திமுகவை அரசியல், அரசாங்கத்தில் இருந்து விரட்டுவது. இந்த லட்சியத்தில், இந்த கோட்பாட்டில் அதிமுகவுடன் பாஜக ஒன்றாக பயணிக்கிறது. தமிழக அரசியலில் இருந்து திமுகவை விரட்டுவதில் நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்.
காவிரி நீரை கர்நாடகாவில் இருந்து பெறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “கர்நாடகாவில் தண்ணீரைப் பெறுவதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேடையிலேயே தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அப்பொழுது கர்நாடகா அரசு உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தனர்.
ஆனால், தற்பொழுது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக தண்ணீர் குறித்து வாய் திறக்காமல் உள்ளது. கர்நாடகா காங்கிரஸ் அரசுதான் தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். காங்கிரஸ் கட்சியின் அடிமையாக உள்ளதால், முதலமைச்சர் ஸ்டாலின் வாய் மூடி மௌனமாக உள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “பாஜக மூன்றாவது முறை ஆட்சிக்கு வரக் கூடாது” - முதலமைச்சர் ஸ்டாலின்