போலி வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய பாஜக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கம் கேட்டு பாஜக சேலம் மாவட்ட நகர்புற வளர்ச்சி பிரிவினர் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சிப் பிரிவு தலைவர் அண்ணாதுரை கூறுகையில்," பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில் தற்போது 33 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தத் திட்டங்கள் குறித்து மாநில தலைவரின் உத்தரவின் பேரில் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த விளக்கம் கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
குறிப்பாக, விவசாயிகள் பயன்பெறும் வகையில் அறிவித்த கிசான் திட்டத்தில் அதிக அளவில் முறைகேடு நடந்துள்ளது குறித்தும் விளக்கம் கேட்டுள்ளோம்.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஆட்சியரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
மேலும், ஊரக நகர்புற பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். முதலமைச்சர் சொந்த மாவட்டத்தில் ஏழை- எளிய மக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மலிவு விலையில் சிமெண்ட் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால், தற்போது சேலம் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பட்டா வழங்கக்கோரி 18 குடும்பத்தினர் கோரிக்கை!