தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாண்டவர் அணிக்கு ஆதரவு திரட்ட நடிகர்கள் நாசர், கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் சேலம் வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாசர், தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தேர்தல் திட்டமிட்டபடி 23ஆம் தேதி நடக்க உள்ளதாகவும், தங்கள் அணிக்கு கலைஞர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், சரத்குமார், ராதாரவி போன்றவர்கள் தேர்தலை சந்தித்தனர். ஆனால், ஐசரி கணேஷ் தேர்தலை சந்திக்கக்கூட தயாராக இல்லை. அதனாலேயே அவர் குறுக்குவழியில் பணபலம், அரசியல் ஆதரவு என அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்றும் தெரிவித்தார்.
ஐசரி கணேஷ்தான் ராதாரவியை அதிமுகவில் இணையச் செய்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாகவே சேலத்தில் தனியார் பள்ளியில் நடைபெறவிருந்த எங்கள் கூட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற எவரோ ஒருவர் செய்யும் செயலால் முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும், எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்திட முதலமைச்சரை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நடிகர் எஸ்.வி.சேகர் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த கருணாஸ், எஸ்.வி.சேகரின் ஆதரவாளருக்கு கட்டட காண்ட்ராக்ட் கொடுத்திருந்தால் அவர் அமைதியாக இருந்திருப்பார். தேர்தல் நடக்கும் அதே நாளில் அல்வா எனும் நாடகம் நடத்த அனுமதி வாங்கியிருக்கும் எஸ்.வி.சேகர் அனைவருக்கும் சுவையான அல்வா கொடுப்பார் என்பது தெரிந்த விஷயமே என்று விமர்சித்தார்.