சேலம் மாவட்ட நீர் மேலாண்மை, சேமிப்பு குறித்து அரசு தனியார் பொறியியல் வல்லுநர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இதில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர் திருப்புகழ் ஐஏஎஸ் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
அதில் பேசிய அவர், "இந்தியா முழுவதும் 256 மாவட்டங்கள் வறண்ட மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வரும் மாவட்ட பட்டியலில் சேலம் மாவட்டம் 84ஆவது இடத்தில் உள்ளது. அதனால் சிறப்பு கவனம் செலுத்தி சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு வேகமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனையும் வழங்கப்படுகிறது. பொறியியல் வல்லுநர்களுக்கான இந்த பயிற்சி முகாமில் மத்திய நீர்வள கமிட்டியின் வல்லுநர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மைத் திட்டமானது நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாற்றப்படும்" என்றார்.
இந்த பயிற்சி முகாமில், அம்மாவட்ட ஆட்சியர் ராமன், மாநகராட்சி ஆணையர் சதீஷ், அரசு, தனியார் நிறுவனங்களின் பொறியாளர்கள் சேலம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.