சேலம்: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 4,000 திரையரங்குகளில் வெளியான 'ஜெயிலர்' படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும், தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்த நிலையில், ஒரே வாரத்தில் சுமார் 300 கோடிக்கு மேல் இப்படம் வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில், திரைப்படத்திற்கு 9 பார்வையாளர்கள் மட்டுமே வந்ததால் சேலம் திரையரங்கில் இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சேலம் மாநகர பகுதியைச் சேர்ந்த அஸ்வினி, தனது தாய் மற்றும் தந்தை இருவருக்கும் திருமண நாள் கொண்டாட்டத்திற்காக ஜெயிலர் திரைப்படத்திற்கு மூன்று டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி: பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திருப்பி அளிப்பு!
அனைவரும் திரைப்படம் பார்க்க வந்த நிலையில், திரையரங்கில் 9 நபர்கள் மட்டுமே இருந்ததால் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றத்துடன் வெளியில் வந்த முன்பதிவு செய்யப்பட்ட ரசிகர்கள் பணத்தை பெற முடியாமலும், படத்தை பார்க்க முடியாமலும் தவித்தனர்.
இது குறித்து கூறிய அஸ்வினி, “எனது பெற்றோருக்கு திருமண நாள் என்பதால், அவர்களை மகிழ்ச்சிபடுத்த நினைத்து, டிக்கெட் புக் செய்தேன். ஆனால், இங்கு வந்து பார்த்தால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது எங்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டது. தியேட்டர் நிர்வாகம் சரியான பதில் கூறவில்லை.
இதனால் நாங்கள் உடனடியாக நீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கான பாதிப்பை நீதிமன்றம் சரி செய்து தரும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகும் லியோ... ரசிகர்கள் கொண்டாட்டம்!