சேலம் அம்மாபேட்டைப் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கலந்துகொண்டார். பொதுமக்கள் ஒன்றிணைந்து தூர்வாரிய குளத்தையும் அவர் பார்வையிட்டார். பின் பொன்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பேசியது, “இந்தியாவின் சார்பாக நிலவுக்கு அடுத்த செயற்கைக்கோளை அடுத்த ஆண்டுக்குள் அனுப்பி நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா திகழும். விக்ரம் லேண்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணங்களை கண்டறிந்து அதை சரிசெய்து, சந்திராயன் 2 அல்லது அதற்கடுத்த செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெறுவதற்கான திறன் இஸ்ரோவிடம் உள்ளது.
மேலும் இந்தியா சார்பாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி 2030ஆம் ஆண்டுக்குள் வெற்றிபெறும்” என்றார். சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பை தொட்டிகளே இல்லாத மாநகராட்சிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அரசுடன் இணைந்து தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் செயல்பட்டால்தான் இதை சாத்தியமாக்க முடியும் எனவும் தெரிவித்தார். தட்பவெட்ப மாற்றங்களினால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள அதிகளவில் மரங்களை நட வேண்டும் எனவும் பொன்ராஜ் கூறினார்.