சேலம் கோரிமேடு பகுதியில் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. அங்குள்ள மாணவியர் விடுதியில் கடந்த 16ஆம் தேதி முதல் சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கரோனா பாதிப்பாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில், மாணவியர் விடுதியில் முதல் தளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை வழக்கம்போல் அஸ்தம்பட்டி மண்டல தூய்மைப் பணியாளர்கள் அறைகளை சுத்தம் செய்தபோது மாரியம்மாள் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி காவல் துறையினர், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கரோனா வார்டில் இறந்த பெண்ணின் உறவினர்கள் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி வாயிலின் முன்பு திரண்டு அழுது புரண்ட சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சென்னையில் கரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழப்பு!