சேலம்: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
பரிசுத் தொகுப்பானது மஞ்சள் பையுடன் கூடிய பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, முழு கரும்பு ஒன்று ஆகியவற்றுடன் நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஜன.3) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாநகரில் உள்ள பெரும்பாலான நியாயவிலை கடைகளில் பரிசு தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
21 வகையான பொருள்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், 18 வகையான பொருள்கள் மட்டுமே வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசின் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பும் பொதுமக்களிடம் 18 வகையான பொருள்கள் மட்டுமே வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நியாய விலைக்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்தும் மஞ்சள் பையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் வீட்டில் இருந்தே பைகளை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆகையால் பொங்கல் பரிசு விநியோகத்தில் நடைபெற்றுவரும் முறைகேடு குறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளது - எடப்பாடி பழனிசாமி