சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பெங்களூரு புகழேந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ‘டிடிவி தினகரன் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் சுற்றிச் சுற்றி சொத்துகளை சுரண்டியுள்ளனர். ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பவே சில வழக்கறிஞர்கள் இருந்தார்கள். அவருக்கு தண்டனை கிடைக்கும் என்று முன்கூட்டியே அறிந்து அவரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தேன். ஆனால் அந்தக் கடிதம் காணாமல் போனது. ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு டிடிவி தினகரனே முக்கிய காரணம்’ என்றார்.
மேலும் ஜெயலலிதா உயிரிழக்கும் போது அவர் நிரபராதி எனவும், அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது ஆயிரத்து 700 கோடி ரூபாய் பணம் டிடிவி தினகரனுக்கு கை மாறியதாகவும் அதை பொது மக்களின் நலனுக்கு அவர் பயன்படுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டும் கூட மத்திய அரசை நேரடியாக எதிர்க்க முடியாமலேயே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டுகிறார் என கடுமையாகச் சாடினார்.