சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அருகேயுள்ள மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (42). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி கனகா (32), மூன்று குழந்தைகள் உள்ளனர். பத்து வருடத்திற்கு முன்பு கனகாவும், சண்முகமும் திருமணம் செய்து கொண்டனர். கனகாவிற்கு 17 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்து விட்டனர். பின்னர் பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
வீட்டு வேலைக்கு சென்று பாட்டியை கவனித்து வந்த கனகா சண்முகத்தை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பக் கட்டத்தில் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்த சண்முகம் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மதுவுக்கு அடிமையான சண்முகம் தினமும் மது குடித்துவிட்டு வந்து கனகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டு, கடந்த 2 மாதத்திற்கு முன்பு கனகா வீட்டை விட்டு ஓடிவந்து சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இருக்கும் போதிமரம் முதியோர் இல்லத்தில் அடைக்கலமானார். இதனையறிந்த சண்முகம் முதியோர் இல்லம் வந்து தனது மனைவியை அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
பிறகு முதியோர் இல்ல நிர்வாகிகள் கணவன் மனைவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நவம்பர் 18ஆம் தேதி இரவு கனகாவை, சண்முகம் குடிபோதையில் நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை செய்து, கனகாவின் தலைமுடியை வெட்டி அலங்கோலப் படுத்தியதாக தெரிகிறது. அதனோடு கனகாவிற்கு விடிய விடிய பாலியல் தொல்லை செய்து துன்புறுத்தியுள்ளார். அவரது பிடியில் இருந்து தப்பிக்க முடிவு செய்த கனகா வலிப்பு வருவது போல் நடித்துள்ளார்.
இது உண்மையென நம்பிய சண்முகம், கனகாவை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு போதிமரம் முதியோர் இல்லத்தின் முன்பாக இறக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார். அப்போது முதியோர் இல்ல நிர்வாகிகள் கனகாவை விசாரித்த போது நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். கனகாவின் உடல் முழுவதும் இருந்த காயங்களை கண்டு அதிர்ச்சியடைந்த முதியோர் இல்ல நிர்வாகிகள் சேலம் மாவட்ட சார்பு நீதிபதி சக்திவேலை சந்தித்து கனகாவை காப்பாற்ற உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனையடுத்து, நீதிபதியின் ஆலோசனையின் பேரில் கனகா சேலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடு, தற்போது போதிமரம் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து கனகாவிற்கு பாலியல் தொல்லை தந்த கணவன் சண்முகம் மீது கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து முதியோர் இல்ல நிர்வாகிகள் கூறுகையில், "கனகாவுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த பெண்களுக்கு நேரக் கூடாது. சண்முகத்திற்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என தெரிவித்தனர்.
கணவனால் துன்புறுத்தப்பட்ட கனகா கூறுகையில், "ஆரம்பத்திலிருந்தே சண்முகம் எண்ணை கொடுமைப்படுத்தி வந்தார். நாளுக்குநாள் கொடுமை அதிகரித்தது. நவம்பர் 18ம் தேதி கொடுமை மேலும் அதிகரித்ததால் வலிப்பு வந்தது போல் நடித்து பிறகு சண்முகம் என்னை போதிமரம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார்" தெரிவித்தார்.
காவல்துறையினர் சண்முகத்தை தேடி வரும் நிலையில், சண்முகம் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கனகா போன்ற பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. சைக்கோ போல நடந்து கொள்ளும் சண்முகம் கைது செய்யப்பட்டு மனநிலை சிகிச்சையளிக்க வேண்டும். இதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.