சேலம்: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 5ஆம் தேதி பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக பஞ்சாப் மாநிலம் சென்றார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்தார். பின், பனி மூட்டம் காரணமாக சாலை மார்க்கமாகச் சென்றார்.
அங்கிருந்த பாலத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, பிரதமரின் பயணப் பாதை கசிந்ததையடுத்து போராட்டக்காரர்கள் அங்கு முன்னதாகவே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பஞ்சாப் அரசின் இந்தப் பாதுகாப்பு குறைபாடு காரணமாக நரேந்திர மோடி, அவரது பாதுகாப்பு வளைய அணிவகுப்பு வாகனங்கள் 20 நிமிடம் பாலத்திலேயே காத்திருக்க வேண்டிய துரதிர்ஷ்டமான நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு நரேந்திர மோடி டெல்லி திரும்பினார்.
டெல்லி திரும்பும் முன், தான் உயிருடன் திரும்பியததற்காக பஞ்சாப் முதலமைச்சருக்கு நன்றி என்று தெரிவிக்குமாறு அங்கிருந்து மாநில உயர் அலுவலர்களிடம் நரேந்திர மோடி கூறி, அவரது உச்சகட்ட அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பஞ்சாப் அரசைக் கண்டித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்நாட்டில் சேலத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ரயில்வே காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் உள்பட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே நரேந்திர மோடியின் உயிருக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக பாஜகவினர் பொய்யான தகவல்களைப் பரப்பிவருவதாக சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்: நரேந்திர மோடி திறந்துவைப்பு