சேலம் செவ்வாப்பேட்டை பகுதியில் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் 2014ஆம் ஆண்டு 80 விழுக்காடு பணிகள் முடிவடைந்து இருந்த நிலையில், அப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 கடைகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்கள் தொடர்ந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டுவந்தது. இந்நிலையில் மார்ச் 21ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை வழங்கியது. அதில் பொதுமக்களுக்கு தேவையான இந்த மேம்பாலத்தின் பணிகளை நிறுத்த முடியாது.
ஒரு மாத காலத்திற்குள் கடைகளை காலி செய்து நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு இழப்பீடு நீதிமன்றத்தின் வாயிலாகவே பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து கடை உரிமையாளர்களுக்கு கடைகளை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது இன்று (மே 29) ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக மாநகராட்சி, மின்சாரத் துறை, வருவாய்த் துறை சார்பாக 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்புப் பணிக்காக உதவி ஆணையாளர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செவ்வாப்பேட்டை மேம்பாலம் கட்டும் பணிகள் நான்கு மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நெடுஞ்சாலைத் துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.