சேலம்: மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் உள்ள இடத்தை நில அளவீடு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், எல்லைக்கற்கள் நட்டு வைத்தனர். இதனிடையே நிலத்தின் உரிமையாளர் விஜயவர்மன், அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்றும், நில ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அந்த இடத்தை கொடுக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் கோட்ட பொறியாளர், மாடர்ன் தியேட்டர்ஸ் நிலம் அரசுக்குச் சொந்தமானது என அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சேலம் கன்னங்குறிச்சி கிராமம் புல எண்.17இல் அப்போதைய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமானது, அதன் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம் என்பவரால் 1935ஆம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அந்த நிலம் நிறுவனத்தின் பங்குதாரர்களால் 1994இல் குமாரசாமி மற்றும் 10 நபர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது. கிரயம் பெற்றவர்களால் இப்புலமானது மனைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இந்த மனைப் பிரிவுகளிலிருந்து பொன்னுசாமி வர்மா மகன் ரவிவர்மா என்பவர், 2004இல் 2.00 ஏக்கர் பரப்புள்ள மனை இடங்களை கிரயம் பெற்றுள்ளார். அவரது மகன் விஜயவர்மன் என்பவர், இந்த வீட்டு மனைப் பிரிவில் புல எண்.17/1ஏ1சி இல் 1,348 சதுர அடி நிலத்தினை, தனது தந்தை ரவிவர்மா என்பவரிடமிருந்து கடந்த 2023 மார்ச் 9-இல்தான் சென்டில்மென்ட் பெற்றார்.
இந்த இடம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவினையொட்டி கிழக்குப் புறமாக அமைந்துள்ளது. இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு கன்னங்குறிச்சி கிராமம் புல எண்.8-இல் சாலை புறம்போக்கில் அமைந்துள்ளது. இந்த புலம் சேலம் சந்திப்பு ஏற்காடு சாலையில் அமைந்துள்ளது. இச்சாலை ஏற்காடு நெடுஞ்சாலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.
இந்த இடத்தில் நெடுஞ்சாலையை ஒட்டிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான புல எண் 8இல் ஆர்.விஜயவர்மன் என்பவர் 2023 நவம்பர் 3ஆம் தேதி 20-க்கு 3 மீட்டர் பரப்பளவில் பேவர் பிளாக்குகளை அமைத்து கேட் நிறுவி, தனது நிலத்திற்கு பாதை அமைக்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
ஏற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இவ்விடத்தில் உள்ள நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக புல எண்ணில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால் கடந்த டிச.2ஆம் தேதி நில அளவையும் கூட்டு புலத்தணிக்கையும் செய்யப்பட்டது.
நில அளவீட்டின் அடிப்படையில், நெடுஞ்சாலை எல்லை மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவுக்கு பின் பக்கத்தில், வடபுறம் 1.05 மீட்டரும், தென்புறம் 0.30 மீட்டரும் இருந்ததால் வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளவாறு அரசு நிலத்தை வரையறுக்க, நெடுஞ்சாலை எல்லையில் கடந்த டிச.4-இல் வருவாய்த்துறை, நெடுஞ்சாலை அலுவலர்களால் மனுதாரர் விஜயவர்மாவின் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எல்லைக்கற்கள் அமைக்கப்பட்டன. இதில் மனுதாரரின் பட்டா நிலம் அளக்கப்படவில்லை.
மேலும், எந்தவொரு கட்டுமானத்திற்கும் பாதிப்பில்லாமலும், கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படாமலும் சாலை புறம்போக்கினை வரையறை செய்து எல்லைக் கற்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்படும்போது மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு உள்ள இடம், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானதாக உள்ளது உறுதியானது.
இந்நிலையில், ஆர்.விஜயவர்மன் என்பவர் தனக்குச் சொந்தமான பட்டா நிலமான கன்னங்குறிச்சி கிராமம் புல எண்.17/1ஏ1சி இல் தனது அனுபவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் மனுதாரரின் சொத்தில் நில அளவை ஏதேனும் செய்வதாக இருப்பின், மனுதாரருக்கு உரிய அறிவிப்பு வழங்கி, தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டம் 2001 மற்றும் தொடர்புடைய விதிகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்து வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு உள்ள இடம் அரசுக்குச் சொந்தமான நிலம் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு வேறு எவரும் உரிமை கோர முடியாது என்பது தெளிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.