சேலம் நகர பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதித்துவருகின்றனர். அதிலும், மாநகரத்தில் உள்ள இரண்டு முக்கிய சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல அனுமதி இல்லை என அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த நடைமுறையானது நேற்று முதல் அமலுக்கு வந்ததால் அந்த இரண்டு சாலைகளிலும் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பிவருகின்றனர்.
இதன் காரணமாக சேலத்தில் உள்ள கடைகளில் ஹெல்மெட் விற்பனை அதிகரித்துள்ளது. இதனிடையே சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோட்டை பகுதியில் ஹெல்மெட் கடை வைத்துள்ள முகமது காசிம் என்பவர் இந்த சூழலை தனக்கு சாதகமாக்கி ஒரு புதிய யுக்தியை கையாண்டுவருகிறார்.
அவர், ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்து ஹெல்மெட் விற்பனையை அதிகரித்துள்ளார். சேலத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதாலும் தற்போது நிலவிவரும் வெங்காயம் விலை உயர்வு காரணமாகவும் ஹெல்மெட் வாங்குபவர்கள் முகமது காசிமின் கடையைத் தேடிவருகின்றனர்.
இதனால் ஹெல்மெட் விற்பனையும் அதிகரித்துள்ளதோடு அனைவரும் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதாக காசிம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் சேலத்தில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் தரமற்ற ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதால் காவல் துறையினர் அதனை கண்காணிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.