சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஊ.மாரமங்கலம் கிராமத்தில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஆறு வயது பள்ளி சிறுமி ஒருவர், மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.
அந்தச் சிறுமி தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை.
இதைக் கண்டித்து, இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மெத்தனப் போக்குடன் செயல்படும் காவல்துறையினரை கண்டித்தும் கோரிக்கை வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்நது காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சித்தபோது கோபமடைந்த அவர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தையின் முடிவில் காவல் துறையினர் கைது நடவடிக்கையை கைவிட்டனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் காவல் துறையினரிடம் வலியுறுத்தி கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!