சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோயில் மேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 10, 7 வயதில் இரண்டு மகள்களும் 6 வயதில் மகனும் உள்ளனர்.
சேலம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் (52) என்பவரின் வீட்டில் சுமதி வீட்டு வேலை செய்துவந்தார். கிருஷ்ணன் ரோட்டரி சங்கத்தின் செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது 10 வயது மகளை பணம் வாங்கிக்கொண்டு கிருஷ்ணனுக்கு சுமதி தத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பாட்டி சின்னபொண்ணு சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், சேலம் சைல்டு லைன் அமைப்புக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதனிடையே, மீட்கப்பட்ட சிறுமியை தாயிடம் ஒப்படைக்கக்கூடாது, தன்னிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று குழந்தையின் பாட்டி சின்னபொண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "நாங்கள் சலவைத் தொழில் செய்துவருகிறோம். எனது கணவனும், மருமகனும் வீட்டிற்கு பணம் கொடுப்பதில்லை. தற்போது எனது மூத்த பெண், 10 வயது குழந்தையை விற்றுவிட்டார்.
எனவே, மீட்கப்பட்ட பேத்தியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். நான் நன்கு படிக்க வைப்பேன்" என தெரிவித்தார்.
சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் கூறுகையில், "சிறுமி தற்போது காப்பகத்தில் உள்ளார். சிறுமி விற்கப்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: கடலூரில் பெண்குழந்தை கடத்தல்: இளம்பெண் கைது!