சேலம் ஏத்தாப்பூர் குமாரபாளையம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் கிரிஷ்வரன் இந்தப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கிரிஷ்வரனின் தந்தை ரத்தக்கட்டி பாதிப்பு நோய்க்காக மாத்திரை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், தந்தை பயன்படுத்திவந்த மாத்திரையை விளையாட்டுப் போக்கில் அவருக்கு தெரியாமல் பள்ளிக்கு எடுத்து வந்து தன்னுடன் படிக்கும் சக குழந்தைகளின் தண்ணீர் பாட்டிலில் சிறுவன் கலந்துள்ளார்.
மாத்திரை கலந்த தண்ணீர் என்று தெரியாமல், இதை குழந்தைகள் அருந்தியுள்ளனர். சிறிது நேரம் கழித்து சில குழந்தைகள் வாந்தி மற்றும் மயக்கம் வருவது போல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். உடனே பள்ளியின் ஆசிரியர் குழந்தைகளை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர், உயர் பரிசோதனைக்காக குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நலமுடன் உள்ளனர்.