தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் ஊதிய உயர்வு, 50 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தின் இரண்டாவது நாளாக இன்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் குறித்து மருத்துவர் சம்பத்குமார் கூறுகையில், "தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் போராட்டங்களை பல ஆண்டுகளாக நடத்திவருகின்றனர்.
இதையடுத்து, அரசு செவிசாய்த்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. இதனால், அண்மையில் மருத்துவர்கள் போராடுவதற்காக (FOGDA) ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில், தாலுகா அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 90 விழுக்காடு மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெளிநாட்டுப் பயணம், சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றை காரணமாகக் கூறி தட்டிக் கழித்துவருகிறது. அதன்பின், அண்மையில் நடந்து முடிந்த பேச்சுவார்த்தையை ஏதோ தேநீர் விருந்தை போல் நடத்திவிட்டு கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறினார்.
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், அரசு மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்களது பணியை புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வேலைநிறுத்தப் போராட்டத்தால் நோயாளிகள் சிகிச்சைப் பெறுவதில் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக பயிற்சி மருத்துவர்கள் மருத்துவப் பணியைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 18ஆயிரம் அரசு மருத்துவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்!