சேலம்: கருமுட்டை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகளில் சென்னை மருத்துவ குழுவினர் விசாரித்தனர். இதுபோல கருமுட்டை சேலத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளிலும் விற்கப்பட்டு இருக்கலாம் என தகவல் கிடைத்ததையடுத்து சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் சாலையில் இருக்கும் தனியார் (ஏகா மருத்துவமனை, சுதா மருத்துவமனை) மருத்துவமனைக்கு இன்று 3 மணியளவில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.
இந்த விசாரணை இன்று மாலை 5.30 மணியளவில் முடிவடைந்தது. பின்னர் இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் சேலத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “16 வயது சிறுமியிடம் கருமுட்டையை பெற்று விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. இதனடிப்படையில் சிறுமியிடம் நாங்கள் வாக்குமூலம் பெற்றதில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கருமுட்டைகளை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் அவர் கூறிய அந்த மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நேற்று (ஜூன் 05) ஈரோட்டிலும் பெருந்துறையிலும் ஆய்வு செய்தோம். இன்று (ஜூன் 06) சேலத்தில் ஆய்வு செய்தோம்.
மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை சரிபார்த்து வருகிறோம். இதில் தவறு செய்திருந்தால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதி மீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஆவணங்கள் அடிப்படையிலேயே கருமுட்டை எடுக்கப்பட்டதாக விசாரணையின்போது மருத்துவமனை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓசூர் சென்று விசாரிக்க உள்ளோம்” என்றார்.
தொடர்ந்து இந்த விசாரணை வெளிமாநிலங்களில் நடத்தப்படுமா? என்று கேள்விக்குப் பதிலளித்த அவர், “அந்த சிறுமி ஆந்திரா மற்றும் கேரளாவிற்கும் தன்னை அழைத்துச் சென்றதாக கூறி இருக்கிறார். மேலும் மருத்துவமனைகளிலும் சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட முட்டைகள் ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது” என்றார்.
மேலும், 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது குற்றமல்லவா எனக் கேள்வி கேட்டதற்கு அவர், "18 வயது இருந்ததை தற்போது 21 வயதாக அதிகரித்து உள்ளனர். எனவே இருபத்தி ஒரு வயதுக்கு மேல் உள்ளவர்களிடம் மட்டும்தான் கருமுட்டையை அவர்களது அனுமதியோடு எடுக்க வேண்டும். ஆனால், இந்த சிறுமியிடம் 14 வயது முதலே கருமுட்டை எடுக்கப்பட்டது.
எனவே 21 ஒரு வயதுக்கு மேல் உள்ளவர்களிடம் மட்டும்தான் இந்த கருமுட்டையை அனுமதியோடு எடுக்க வேண்டும். ஆனால் இந்த சிறுமியிடம் 14 வயது முதல் 16 வயது வரை இரண்டு ஆண்டுகளாக கருமுட்டை எடுத்து விற்றுள்ளனர்.
எனவே, இதில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது மருத்துவ சட்டங்களுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 40 நாள் குழந்தையின் வயிற்றில் கரு