சேலம் மாவட்டம், மரவனேரி பிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்து பிரியா. தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிவருகிறார். சேலம் அடுத்த செட்டிச் சாவடி ஊராட்சி துணை செயலாளராகவும், அப்பகுதி திமுக பிரமுகராகவும் இருக்கும் ராஜ் என்பவரின் மகன் கலைச்செல்வன். இவரும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் கலைச்செல்வனுக்கும், இந்து பிரியாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் எல்லை மீறிய காரணத்தினால், கர்ப்பமான இந்து பிரியா சேலம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கலைச் செல்வன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களாக கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. திருமண செய்ய மறுத்த நிலையில், கலைச்செல்வன் தனது செல்போன் எண்ணை மாற்றிக் கொண்டு, சேலத்திலிருந்து கோயம்புத்தூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சென்றார்.
இந்நிலையில் கலைச்செல்வன் குடும்பத்தார் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி, இன்று(அக்.26) சேலம் திமுக வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதனையறிந்த இந்து பிரியா தனது உறவினர்களுடன் சென்று தன்னை கலைச் செல்வனுக்கு திருமணம் செய்து வைக்குமாறு, அவரின் குடும்பத்தாரிடம் கேட்டபோது பிரியாவை தகாத வார்த்தைகளால் திட்டி திருப்பி அனுப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அவர், சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் பிரியாவின் புகாரை இரவு பத்து மணி ஆகியும் எடுத்துக்கொள்ளாமல் அலைகழித்து காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யும் வரை வெளியில் செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் பிரியா ஈடுபட்டார். இதையடுத்து கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து பிரியா," என்னை ஏமாற்றிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்து என்னை போல வேறு எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்படாத வகையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். " என்று தெரிவித்தார்.
இன்று (அக்.26) திருமணம் நடைபெறவிருந்த நிலையில் காதலித்து ஏமாற்றிய வழக்கில் மணமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.