சேலம்: மாண்டஸ் புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று (டிச. 11) காலை ஏற்காடு - சேலம் மலைப்பாதையில் உள்ள 18ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ராட்சத மரம் ஒன்று மழைக்காரணமாக வேரோடு சாய்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின் துறை ஊழியர்கள், ராட்சத மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் மரத்தை அப்புறபடுத்த முடியாமல் தவித்த ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் அகற்றினர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரம் அகற்றப்பட்டதால், அதுவரை போக்குவரது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்பின் வாகனங்கள் சென்றன. இதனைத்தொடர்ந்து ஏற்காடு மலை பாதைகளில் ஒரு சில இடங்களில் சாலையோரம் மண் சரிந்து கற்கள் சாலைகளில் விழுந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியிலும் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் தாக்கம்: முழு கொள்ளவை எட்டிய 30 ஏரிகள்!