மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா , அர்ஜுனா, துரோணாச்சாரியார் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு வெவ்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த ஐந்து வீரர்களுக்கு மத்திய அரசு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை அறிவித்துள்ளது . இதில் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு தடகளப் பிரிவில் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மாரியப்பன் தங்கவேலுவின் சொந்த ஊரான செலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியிலுள்ள அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் மாரியப்பன் தங்கவேலுவின் சகோதரி சுதா கூறுகையில், ‘எனது தம்பி மாரியப்பனுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் மேலும் இதுபோல பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். அதேபோல் விளையாட்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமையை சேர்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
அவரது நண்பர் மணீஷ் கூறுகையில், ‘2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். தற்போது மத்திய அரசு மாரியப்பன் தங்கவேலுவிற்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கியுள்ளது, எங்களுக்கும், எங்களது கிராம மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது பெற்ற மாரியப்பன் பிரத்யேக பேட்டி!