தமிழ்நாட்டில் காலியாக உள்ள காவல்துறை பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்வு செய்கிறது. அதன்படி இரண்டாம் நிலை சிறை காவலர்கள், இரண்டாம் நிலை தீயணைப்பு காவலர்கள், இரண்டாம் நிலை ஆயுதப்படை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைப்பெற்றது.
8 ஆயிரத்து 826 காவலர் காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வில் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 228 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் ஜெயராம் கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரி, செந்தில் பப்ளிக் ஸ்கூல், ஆகிய நான்கு மையங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார்கள். அதேபோல் சென்னையில், காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி, கோடம்பாக்கம் மீனாட்சி பெண்கள் கல்லூரி உள்ளிட்ட 13 மையங்களில் 19 ஆயிரத்து 990 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் இரண்டாயிரத்து 429 பேர் பெண் தேர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் எட்டு தேர்வு மையங்களில் 9 ஆயிரத்து 599 பேர் தேர்வு எழுதினார்கள். கடலூரில் ஒன்பது தேர்வு மையங்களில், இரண்டு திருநங்கைகள் உட்பட 15 ஆயிரத்து 736 பேர் தேர்வு எழுதியுள்ளனர். திருவாரூரில் அமைக்கப்பட்ட மூன்று மையங்களில் மூவாயிரத்து 48 பேர் தேர்வு எழுதினர். தர்மபுரியில் 11 தேர்வு மையங்களில் 17 ஆயிரத்து 139 பேர் தேர்வு எழுதினார்கள்.
தேர்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 11.20 மணிவரை நடைப்பெற்றது.