சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது சங்கீதப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி இறந்துவிட்டார். இந்த நிலையில் தனது இரண்டு மகள்களைப் பெருமாள் வளர்த்துவந்தார்.
2015ஆம் ஆண்டு இரண்டு பெண் குழந்தைகளும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப்பெற்றனர். அப்போது அக்குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த செவிலி ஒருவர் சேலத்தில் உள்ள சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த சில்வியா, நிர்வாகிகள் அந்த இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டு சேலத்தில் உள்ள குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். அப்போது குழந்தைகள் நலக்குழு நிர்வாகி சேவியர் விசாரித்தபோது பெண் குழந்தைகளின் தந்தை பெருமாள் அவ்வப்போது தன் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தததைக் கண்டுபிடித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சேலம் சூரமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் பெருமாளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெருமாள் முன்னுக்குப் பின்னாக பேசி சந்தேகம் வரும்படி நடந்துகொண்டதால் அவரைக் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து பெண் குழந்தைகள் இருவரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது நீதிபதி முருகானந்தம் வழக்கு விசாரணை மேற்கொண்டார். பின்பு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெருமாளுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படியுங்கள்: 'எப்படி நீ எங்க நடைபாதையில் வரலாம்' - பெண்ணின் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய 4 பேர்!